Wednesday, October 13, 2010

யார் அனாதை ?


மரணம்
பூமியில் ஜனித்த

அத்தனை உயிர்களுக்கும்
நிச்சயிக்கப்பட்ட
மாறா வரம்...

ஜனத்திரள் நெருக்கத்தில்
மின்சார காடாய்

மாறிப் போன
ஒரு இடுகாட்டு வாசலில் நான் !

தொழில் நிமித்தமாய்
நிற்க நேர்ந்தது
சில மணி நேரம் !

வாழ்ந்த போதும்
வாழ்வுக்கு பிறகும்
மரியாதை எனும் சொல்லை
மரியாதைக்கு கூட பார்த்திராத
மனித உடல்
மரித்த நிலையில்...

அனாதை பொனம்
அள்ளிப் போடு
சாவுகிராக்கிங்க
வேறு எங்காவது
போய் சாகலாம்ல

அசௌகர்யமாய்
காதில் விழுந்த வார்த்தைகளும்
காட்சிகளும்...

நிற்க !

மனித்துளிகள் கடக்க
மற்றொரு மனித
உடல்
ராஜபாட்டையுடன்
வாண வேடிக்கைகள்
தாரை தப்பட்டைகள்
இன்றைய பிணத்துக்கு முன்
ஆடிப்பாடி அரை மயக்கத்தில்
வந்த நாளைய பிணங்கள்...

இடுகாட்டுள் இருமாப்புடன் நுழைய
காண்கிறேன்...

நேரம் கடந்தது
காரியம் முடிந்தது

இரு தரப்பும் வெளியேற
கையில் இரு வேறு குவளைகள்

ஓடி வந்த இடுகாட்டு ஊழியர்
ஐயா சாமி குவளை மாறிடிச்சு
அலறிய சத்தம் !

தேடல் தொடங்கியது
சாம்பல் குவளைக்குள்

அனாதை சாம்பல் எது ?
ஆண்டையின் சாம்பல் எது ?

அந்தி சாய்ந்தும் முடியவில்லை
தேடல் !

தெரிந்தவர் சொல்லுங்கள்
எந்த சாம்பல் ?
யாருடையது ?

இல்லையேல் இங்கே வெடிக்கும்
ஒரு சாதிக் கலவரம்
சாம்பலை கண்டுபிடிக்க !

Tuesday, August 17, 2010

எங்கே சுதந்திரம் ?


ஆகஸ்ட் 15 !

நள்ளிரவில் கனவு ஒன்று கண்டேன் !
கனவில் வந்தார் காந்தி தாத்தா
பெற்றுக் கொள் பேராண்டி
சுதந்திரம் என்று ஒன்றை
தந்தார் என் கையில் !


காந்தி தாத்தா
தந்த சுதந்திரத்தை
கம்பீரமாய் கையில் ஏந்தி


கல்வி கற்க சென்றேன்
லட்சங்களை கொண்டு வா
லட்சியங்களை அடையளாம்
இலவசமாய் கல்வி பெற
உனக்கில்லை சுதந்திரம்
என்றார்கள் !


மனதிற்கு பிடித்த பெண்ணை
மனம் முடிக்க சென்றேன்
சாதி விட்டு சாதி மணம் முடிக்க
உனக்கில்லை சுதந்திரம்
மறந்துவிடு அவளை
என்று
என் மனம் நோக
சொன்னார்கள் !


அரசியல் களம் கண்டு
அதிசயங்கள் செய்ய
எண்ணி எடுத்து வைத்தேன்
முதல் அடியை
நேர்மையாய் அரசியல் நடத்த
உனக்கில்லை சுதந்திரம்
வந்த வழி போய் விடு
உயிராவது மிஞ்சும் என
மிரட்டாமல் மிரட்டினார்கள் !


பத்திரிக்கை உலகம்
புகுந்து சரித்திரம் படைத்திட
சபதம் ஏற்றேன்
ஆளும் வர்க்கத்திற்கு எதிராய்
எழுத உனக்கில்லை சுதந்திரம்
மூடிவிடு பேனாவை
என்று மூக்கு உடைத்து
சொன்னார்கள் !


என் நிலை தான் இப்படி
எம் நாட்டு பெண் மக்கள் எப்படி ?
என பார்க்கச் சென்றேன்
சுதந்திரமா ? காட்டுங்கள்
என ஆர்வமாய் வாங்கியவர்கள்
வாங்கிய மாத்திரத்தில்
என்னிடமே தந்தார்கள்
அதை வைத்திருக்க

கூட அவர்களுக்கு இல்லையாம்
சுதந்திரம் !


கையில் வாங்கிய சுதந்திரத்தின்
அர்த்தம் புரியாமல் வாங்கியவரிடமே
திரும்பி கொடுத்துவிட தேடினேன்
காந்தி தாத்தாவை

சட்டென கலைந்தது தூக்கம் !
பட்டென கேட்டது ஒரு குரல் !


காந்தி தாத்தாதான்
கோடிக்கணக்காய் புரலும்
கள்ள நோட்டுக்களுக்குள்
சிரித்த முகமாய்
சிறைபட்டு கிடக்கிறாரே
என்றது அந்த குரல் !


எங்கு தான் இருக்குது சுதந்திரம் ?
யாராவது பார்த்தால் சொல்லுங்கள் !
பெற்ற சுதந்திரத்தை வாழ்வில்
ஒரு முறையாவது
அனுபவித்து விட்டு மரிக்கிறேன் !

Wednesday, August 4, 2010

பிறக்க வேண்டும் ஒரு பெண் குழந்தை...


சாபம் இடுவதாக
எண்ணி
நண்பன் ஒருவன்
ஆத்திரத்தில கூறினான் !

தலைப்புள்ள பொட்டப்புள்ளையா
பொறக்கணும்டா உனக்கு !

சாபமாய் அவன்
நினைத்தாலும்
வரமே
அது எனக்கு !

பிறக்க வேண்டும்
ஒரு பெண் குழந்தை !

என் மகளை
மகளாய் வளர்க்காமல்
மகனாய் வளர்த்திடுவேன்
எனச் சொல்லாமல்
மகளை மகளாகவே
வளர்த்திடுவேன்...

இப்படித் தான் இருக்க
வேண்டும்
பெண்
என இல்லாமல்
எப்படியும இரு
ஆனால்
இவர் இப்படி
எனச் சொல்லும்படி இராதே
எனக் கூறி
வளர்த்திடுவேன் அவளை...

நீண்ட கூந்தலோ ?
நெடிய சேலையோ ?
உன் மனம் விரும்பும்
போக்கில் உடையணிவாய்
மலரே என
ஆடை சுதந்திரத்தை
அவளுக்கு
அளித்து வளர்த்திடுவேன்

பெண்ணுக்கு இல்லை
இலக்கணங்கள்
மனிதத்தோடு வாழ்ந்திட
சக மனிதரோடு
இணக்கமாய் வாழ்ந்திடு
என வாழ்த்தி
அவளை வளர்த்திடுவேன் !

கோடிக்கு ஒரு இந்திரா
லட்சத்திற்கு ஒரு அன்னை தெரசா
இப்படி
நீ மட்டும் வளர்வதோடு
நில்லாமல்
உன் இனத்தையும்
வளர்த்திடு என
வாஞ்சையோடு அவளை வளர்த்திடுவேன் !

மனைவியாய் பாராது
சக மனுஷியாய்
பார்பவனை
மனந்திடும் உரிமையை
அவளுக்கே வழங்கிடுவேன் !

பெண்ணாய் பிறந்ததால்
இயற்கை என்றைக்கும்
எதிரியாய் நிற்கும்
என்பதால்
இலகுவாக இல்லாமல்
இரும்பு மனுஷியாய்
அவளை வளர்த்திடுவேன் !

இத்தனையும் நிறைவேறிட
நிச்சயம் பிறக்க வேண்டும்
ஒரு பெண் குழந்தை !

Saturday, July 31, 2010

பாப்கார்ன் ஷாப்பிங்...

ஷாப்பிங்...
உலகமயம் நமக்களித்த
உன்னத பரிசு !
உலகமயத்தை எதிர்ப்பவனாயிருந்தாலும்
இன்று நானும் சென்றேன்
ஷாப்பிங்
அவளோடு...
ஆதிகாலத்தில் வண்டி கட்டி
சந்தைக்குச் சென்ற வம்சம்
என்பதால்
ஷாப்பிங்
பெரிதாய் உருத்தவில்லை...
எம் ஷாப்பிங் பயணத்திற்கு
முதல் எதிரியாய்
வந்தது
அந்த பேய் மழை !

என்னடா ?
நம்ம வர்றதே எப்பாவது ஒரு தடவை
ஏன் இப்படி பண்ணுது இந்த மழை
என
சிங்காரி அவள் சிணுங்கியது கேட்ட
மேகங்கள்
சட்டென நிறுத்தியது தூவாணத்து
தூறலை !

கடை கடையாய்
ஏறி களைத்து போவோர் பலர்
ஆனால்
அதுவே கடை
இதுவே உடை
என அழகாய்
அளவாய்
சொல்பவள் அவள் !
உடை எடுக்கச் சென்றதோ
எனக்கு
ஆனால் ஓடி ஓடி அலைந்ததோ
அவள் !
கர்ப்பத்தில் இருக்கும்
குழந்தை
சிவப்பாய் பிறந்திட
குங்குமப் பூ
உண்ணும் அன்னையையாய்
எனக்கான உடையை
அவள்
தேடி தேடி தேர்ந்தெடுத்த அழகு
என் வாழ்வில்
வசந்தத்தின் வரவு !
சாலைகளை கடக்க
அவள் கையை நானும்
என் கையை அவளும்
பிடித்திருந்த வடிவை
பொறைமையுறாதோர்
பூமியில் இல்லை !

யார் யாருக்கோ எதில் எதிலோ
உயிர்
அவளுக்கோ ஊர் சுற்றுவதில்
உயிர் !
ஊர் சுற்றும் பெண் மக்கள்
வீட்டுக்கு அடங்கார் !
எனச் சொல்லும்
ஆணாதிக்க கூற்றை உடைத்தெறியும்
குணமது !

எல்லாவற்றுக்கும்
உண்டு ஒரு கணக்கு !
எம் பயணத்திற்கும்
இருந்தது ஒரு கணக்கு !

ஆதியில் வாங்கிய பாப்கார்ன்
பொட்டலமே
எமக்கான மணிக்கூண்டு !
பாப்கார்ன் தீர தீர
எம் பயணம் முடிய
இருப்பதை உணர்த்தியது

இறுதியில் இனிமையாய் முடிந்தது
ஷாப்பிங்
காலியான பாப்கார்ன்
பொட்டலத்தோடு !
எத்தனை பாப்கார்ன்கள்
தீர்ந்தாலும்
தீராது ஷாப்பிங் மீதான
எம் ஆசை !

இன்று முடிந்திருக்கும் ஷாப்பிங்
ஒரு இடைவேளையே !
எம் இதயம் இனிமைப்பட
என்றும் தொடரும்
ஷாப்பிங்
ஒரு தொடர்கதையே !


Tuesday, July 13, 2010

அலைபேசிகளுக்கு நன்றி


தந்தையை இழந்த சோகத்தில்
நின்றிருந்தான் தோழன்...

கிடத்தப்பட்டிருந்த சடலத்திற்கு
இறுதி மரியாதையை
சிறப்புடன் செய்து கொண்டிருந்தார்
இடுகாட்டு ஊழியர்...


அருகில் நின்றிருந்த
அனைவரிடத்திலும்
அமைதி மட்டுமே இருந்தது...


இறந்த மனிதனுக்கான
இறுதி மரியாதையென
அந்த
மௌனத்தை
பார்த்திருந்தேன்...

ஆனாலும்
எனக்குள் ஒரு பயம் !
இன்னும் சில நிமிடங்களில்
முடிய உள்ள
இறுதி காரியத்தில்

நான் எதிர்பார்த்த
அந்த
அசம்பாவிதம்
நடந்திடக் கூடாதே !

அனைவரிடமும் சொல்லி
தடுத்திட துடித்தது
மனம்...

சத்தமில்லாமல் சமிக்கைகள்
கொடுப்பது எப்படி?

ஒன்றும் புரியவில்லை !
நல்ல வேளை நிமிடங்களில்
முடிந்தது
காரியம்

இடுகாட்டு அறையில்
இருந்து வெளியேறி
பெரு மூச்சு விட்டபடி
நன்றி
சொன்னேன் !
யாருக்கு ?
துக்க காரியத்தின் போது
துள்ளல் பாட்டையோ ?
வடிவேலுவின்
நகைச்சுவை வசனத்தையோ ?
ரிங்டோனாக ஒலித்து
ஆழமாய் ஆதியிலிருந்த
அமைதியை
கெடுத்திவிடாத
அத்தனை
அலைபேசிகளுக்கும் !
அதனை அணைத்து
வைத்திருந்த
என் மனித நண்பர்களுக்கும் !


Wednesday, July 7, 2010

புறமுதுகுப் பேசுவோர்!பிறர் வாட செயல்கள்

செய்வோர் !

இவர் வாழ வழி

எதுவென அறியாதோர் !

அவன் அப்படி; இவள் இப்படி;

இதுவே இவர் பேச்சின் அடிப்படை !

அடுத்தவர் அந்தரங்கத்தில்

கூசாமல் நுழைந்து பார்க்கும்

பாழான கலாச்சாரம் !

பிறர் குறித்து அவதூறு

பேசி திருப்தி அடைவதே

இவர் வழக்கம் !

இருப்பதை இல்லை என்பார் !

இல்லாததை இருக்குது என்பார் !

இறுதி வரை உண்மை அறியாமல்

ஊருக்கு உபதேசம் அளித்திடுவார் !

சிறியதும் பெரியதுமாய்

பொய்கள் பேசி

சிற்றின்ப வெள்ளத்தில்

மூழ்கி தெளித்து

இவர் எடுக்கும்

முத்தினை முகர்ந்து பார்த்தால்

நாற்றம் குடலை புரட்டும்

நாச்சக்கார சக்தி இவர்கள்...

நல்லோரே கேளுங்கள் !

புறமுதுகுப் பேச்சுக்கு

ஒரு போதும் பணியாதீர்

இல்லையேல்

மன இறுக்த்தின் கோரப் பிடிக்கு

சிக்கி தீராத பிணிக்கு ஆளாவீர் !

புறமுதுகு பேச்சால் நாட்டுக்கும்

பயனில்லை !

அதை பேசி திரியும்

நயவஞ்சகர்களுக்கும்

பயனில்லை !

அவசியமற்ற பேச்சுக்களை

தவிர்த்திடுவோம்

ஆரோக்கியமான சமுதாயம்

அமைத்திடுவோம் !

Tuesday, June 29, 2010

நீ நீ நீ நீ நீ நீ நீ நீ..........தி (தீ)கதை கேளு...கதை கேளு...

ஜனநாயக நாடு ஒன்று

ஜனப்படுகொலைக்கு துணை போன

துயரமான

கதை கேளு...கதை கேளு...

போரும் நடக்கல !

பூகம்பமும் வரல !

ஒரே ராத்திரியில

பல்லாயிரம் பேர்

பொசுங்கிப் போன

பரிதாபமான

கதை கேளு...கதை கேளு...

கயவர்கள் சில பேரு...

காத்துல நஞ்சு கலந்து...

உசிரு குடிச்ச உக்கிரத்தை

வருஷம் 30ஆகியும்

ஏன்னு கேட்க

துப்பில்லா தேசத்தின்

கதை கேளு...கதை கேளு...

உயிருக்கு ஒரு ருபாய் அபராதம்னு

20ஆயிரம் பேர கொன்னவனுக்கு

20ஆயிரம் ரொக்கத்த

அபராதம் விதிச்சு

தீர்ப்பு சொல்லி கலங்கப்பட்ட

நீதித் துறையோட

கதை கேளு...கதை கேளு...

ஒரு அமெரிக்கன்

உசுருக்கு முன்னாடி

ஒரு லட்சம் இந்திய உசிரு

மசிராகிப் போன

மானங்கெட்ட

கதை கேளு...கதை கேளு...

என்ன கதை கேட்டு

என்னதான் ஆச்சுதுங்க

தாமதமா கிடைச்சாலும்

உருப்படியா கிடைக்காத

நீதி ஒரு நீதியில்லை !

விஷவாயு கசிவால மாண்ட

மக்களுக்கு

இடுகாட்டில் வைக்ப்பட்ட

மற்றுமொரு தீ.....

இந்த நீ நீ நீ நீ நீ நீ......தி (தீ)

Wednesday, June 16, 2010

என்று தணியும் ?


கம்யூனிசம் வாழட்டும் !
இல்லை வீழட்டும் ?
காந்தியம்
பிழைக்கட்டும் !
இல்லை சாகட்டும் ?
அமெரிக்க ஏகாதிபத்தியம் !
வளரட்டும் இல்லை தளரட்டும் ?
மாநில அரசுகள்
மத்திய அரசை
சுரண்டட்டும் !
இல்லை வாரி
வழங்கட்டும் ?
உலக நாடுகள்
இந்தியாவை
போற்றட்டும் !
இல்லை தூற்றட்டும் ?
எதுவே வேண்டுமானாலும்
நடக்கட்டும் ?
எப்படி வேண்டுமானாலும்
போகட்டும் !
அய்யா பெரியவரே !
அரசியல் பிழைப்போரே !
நித்தமும் ஒரு வேளை உணவு
மட்டும் உண்டு
உறங்க போகும்
என் பல கோடி இந்திய
சொந்தங்களின்
பசி போக என்ன
செய்தீர்கள் ?
செய்வீர்கள் ?
புரட்சிக்கு அடிப்படை
என்னவென்று தெரியாது எனக்கு
ஆனால்
அடிப்படையில்
தனி மனித பசியே
புரட்சிக்கு விதை !
அரசில் பெரியோரே
ஆட்சியில் உள்ளோரே !
முடிவு செய்யுங்கள்
பசிக்கு தீர்வா ?
இல்லை புரட்சிக்கு..........?

Tuesday, June 1, 2010

அலுவலகத்து சிசிடிவி கேமிரா !

நம்பிக்கை என்னும்
சொல்லின்
மரணத்தில்
ஜனித்த
நவீனத்தின் குழந்தை !

தனக்காய் பாடுபடும்
தொழிலாளியை
கண்கானிக்க இரு கண்கள்
போதாது என எண்ணும்
முதலாளியின்
மூக்கு கண்ணாடி !

என் அலுவலகத்து
பெண் மக்கள்
கலைந்த உடையை
சரி செய்யக்
கூட அச்சப்பட்டு
யாரோ பார்பதாய் எண்ணி
அஞ்சி மருக வைக்கும்
நவயுகத்தின் துச்சாதனன் !

இதயத்துக்கு இனியவர்கள்
அலைபேசியில் அழைத்தால்
ஐய்யோ பார்க்கிறானே
என பயந்து
மறைவிடத்திற்கு
ஓடி எனை
பேச வைத்த
உயிரில்லா உயரதிகாரி !

உழைப்பு உறிஞ்சும்
உலகமயத்தின்
உன்னத படைப்பாய்
அலுவலகங்களில் உயர்ந்து
நிற்கும் சுழலும் சூழ்ச்சிக்காரர்கள் !

கண்கானிப்பு கேமிராக்கள்
வைத்து உருப்படியாய்
ஏதும் செய்ததாய் தெரியவில்லை

அயராது உழைத்து 5
நிமிடம் தூங்கிப் போன
தொழிலாளியை
வேலை நீக்கம்
செய்ததை தவிர ?

Wednesday, May 26, 2010

மாவோயிஸ்டுகள் ?

ஆயுதப் புரட்சியின் மூலம்
மீட்சியை பெறுவதாய்
சொல்கிறார்கள் !
ரயில் கவிழ்ப்பை தவிர
வேறு புரட்சி செய்ததாய்
தெரியவில்லை ?

ஏழை பங்காளர்கள் என
மார் தட்டி நிற்கிறார்கள்
ஏழைகளை தவிர
வேறு யாரையும்
கொன்றதாய் தெரியவில்லை ?

மார்கஸையும், மாவோவையும்
போற்றி புகழ்கிறார்கள்
மார்க்சிஸ்ட்டுகளை கொல்வதை
தவிர வேறு
லட்சியம் கொண்டதாய் தெரியவில்லை ?

பழங்குடி மக்களுக்காய்
பாடுபடுவதாக சொல்கிறார்கள் !
பகடைகாய்களாய் அன்றி
அவர்களை பண்படுத்தியதாய்
தெரியவில்லை ?
முதலாளித்துவத்தை
அடியோடு அழிக்கும் அதிகாரம்
கொண்டதாய் சொல்பவர்கள் !
(காங்கிரஸ்) பெருமுதலாளிகளுக்கு
காவல் காப்பதில் காட்டும்
கன்னியத்தை வேறு
எங்கும் காட்டியதாய் தெரியவில்லை ?

மாவோயிஸ்டுகள் எனச் சொல்லி
மம்தாயிஸ்டுகளாக மாறிப்போனவர்களே !
மாற்றம் ஒன்றை தவிர
மாற வேறு ஒன்று இல்லை
மார்க்சிஸ்டுகள் சிந்திய ரத்தம்
ஒரு போதும் வீண் ஆனதில்லை

அப்பாவிகளை கொல்வதை
அடியோடு நிறுத்துங்கள் !
மக்கள் புரட்சி மகத்தானதே
அதை மக்களுக்காக செய்ய
முனையுங்கள் !
சாமானியர்களின் சமாதியில்
சமதர்ம பூங்கா அமைத்திட முடியாது !
அதை உண்மை பொதுவுடமை இயக்கங்கள்
ஒரு போதும் அனுமதிக்காது !

Friday, May 21, 2010

அவள்....?


என்னுடன் சிரிக்கிறாள் !
எனக்காய் அழுகிறாள் !
பசி என்ற நினைத்த மாத்திரத்தில்
எனக்கு படையிலிட்டு
பரிமாறுகிறாள் !
அவளோடு தொடங்கும்
என் பொழுது
அவளின்றி முடிய
மறுக்கிறது !
அவள் மனத் தெம்பு
குறையும் நேரத்தில்
என் வார்த்தைகளிலிருந்து
திராணியை சேகரிக்கிறாள் !
நான் சோர்ந்து விழும் போது
நம்பிக்கை வார்த்தைகளில்
எனைத் தாங்கி நிற்கிறாள்
அவள் விரல் நுணியில்
என் வலிக்கான
மருந்து
என் விழிச்சிரிப்பில்
அவள் விசும்பலின்
முடிவு
எனக்கும் அவளுக்குமானது
தாமரைக்கும் சூரியனுக்குமான
உறவு
அவளுக்காகவே
நான் உதிக்கிறேன் !
எனக்காகவே
அவள் மலர்கிறாள்
யார் இவள் எனக்கு ?
உறவுகள் சொல்லி
அவள் அன்பின்
ஆழத்தை குறைத்திட
மனமில்லை
ஏன் எனில்
அவள்
எனக்கு எல்லாமுமானவள் !

Wednesday, May 19, 2010

எம் ஈழ மக்கள்


தொப்புள் கொடி உறவா ?
இல்லை
தொன்று தொட்ட மரபா ?
எதுவென தெரியாது
ஆனாலும் அவர்கள்
எம்மவர்கள் !
நான் பேசும்
மொழியை
நன்றாய் பேசுபவர்கள்!
காப்பவன் யார் ?
அழிப்பவன் யார் ?
எதுவும் அறியாது
பதுங்கு குழிக்குள்
பாத்தியப்பட்டவர்கள் !
கிளஸ்டர் குண்டுகளுக்கு
கொத்து கொத்தாய்
மாண்டவர்கள் !
கந்தகத்தை சுவாசித்து சுவாசித்து
நுரையீரல் நோய்ப்பட்டவர்கள் !
அரசியல் அறியாததால்
அதிகாரத்தை விட்டவர்கள்
இன்று பலர் அரசியல் நடத்த
அஸ்திவாரம் ஆனவர்கள் !
தனி ஈழம் கிடைத்தால் என்ன ?
தனி நாடு கொடுத்தால் என்ன ?
மாண்டவர் மீள்வதில்லை !
சிரிக்கும் புத்தரின் சீடர்களே
இனியாவது வாழ விடுங்கள்
எம் மக்களை !
துயர் கொண்ட நெஞ்சங்கள்
இன்று துவண்டிருக்கலாம்
ஆனால்
என்றுமே தூங்கிவிடுவதில்லை!
பூந்தோட்டத்தில்
புரட்சி பிறப்பதில்லை
எகாதிபத்தியத்தின் பிடி
நீண்ட நாள் நிலைப்பதில்லை !
விடியலுக்கு இல்லை வெகுதூரம்
மௌனமாய் காத்திருப்போம் சில காலம்.....

Sunday, May 9, 2010

ராமனின் சீதைக்கு !

லங்கையில் கண்ணீரில் குளித்த நீ
உன் கணவனின் கண்மூடித்தனத்தால்
தீயில் குளித்தாய்....
கற்பு என்னும் கற்பனைக்கு
நீ தான் இலக்கணமாம் !
உன்னை காரணம் காட்டி
இங்கே ஓராயிரம் சீதைகளை எரித்துவிட்டார்கள்...
எங்கள் நவயுக ராமன்கள் !
தீயில் குளித்த நீ
எழுந்தது போல்
எங்கள் தாய்மார்கள் எழுவது இல்லையே !
தவறான உதாரணத்தை தரணிக்கு தந்துவிட்டாய்
மன்னித்து விடு
தாயே
உன்னை மன்னிக்க எனக்கு மனமில்லை !


Saturday, May 8, 2010

என்று நுழைவோம் ?
என் பாட்டன் காத்திருந்தான்
பன்னையார் அனுமதிக்கவில்லை...
என் தாத்தா காத்திருந்தார்
வெள்ளைக்காரன் அனுமதிக்கவில்லை...
என் தந்தை காத்திருந்தார்
அரசாங்கம் அனுமதிக்கவில்லை....
நானும் காத்திருக்கிறேன்
உன் வாசலில் நுழைய...
பரம்பரையாய் காத்திருந்தும்
பராசகத்தியே உன் கோவிலுக்குள்
நீ கூட எங்களை அனுமதிக்கவில்லையே ?

Wednesday, May 5, 2010

புடவை ?


புடவை !
தோள் சீலை போராட்டத்தின் குழந்தை !
பாரம்பரியத்தின் அடையாளம் புடவை
பிதற்றும் பைத்தியக்காரர்களே !
எது பாரம்பரியம் ?
சபையில் வைத்து உரியப்பட்டது திரௌபதியின் புடவை !
சுடிதார் அணிந்திருந்தால்
என்ன நடந்திருக்கும்
சிந்தித்த்து உண்டா என்னாலும் ?
பேருந்து பயணங்களில்
இடுப்பை கிள்ளும் இழிவு பிறவிகளின்
இச்சைக்கு பிச்சையிடவா
புடவை ?
குணிந்தால் அங்கங்கள் தெரியும் !
ஓடினால் கால்கள் இடறும் !
குணியாமலும், ஓடாமலும் செய்யும் வேலைகள்
தான் ஏதேனும் உண்டா ?
சிந்தீப்பீர் எம் பெண்டிரே !
ஆணுக்கு பெண் சரி நிகர்
சமானமாய் ஆவது எப்போது ?
உம் வளர்ச்சிக்கு தடையாய்
இருக்கும் புடவையை துறந்து
உமக்கேற்ற உடையில் நீர் புகும் போது !
உடுத்துபவருக்கு உகந்ததாய்
இருப்பதே உடை !
புடவை என்றுமே பெண்டிர் வளர்ச்சிக்கு தடை !

Tuesday, April 27, 2010

Monday, April 26, 2010

கண்டிப்போம்....குரல் கொடுப்போம்...

வேலை பளு காரணமாக என்னால் தொடர்ச்சியாக பிளாக்கில் எழுத முடியாமல் போகிறது....ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் 25 ஏப்ரல் அன்று நடைபெற்ற வழக்கறிஞர்கள் மோதலில், பத்திரிக்கையாளர்கள் குறிவைத்து தாக்கப்பட்டதை கண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மீண்டும் இன்று எழுதுகிறேன். எங்கு என்ன பிரச்சினை நடந்தாலும் முதலில் தாக்குதலுக்கு உள்ளாவது பத்திரிக்கையாளர்கள் என்ற தவறான கேடுகெட்ட போக்கு தமிழகத்தில் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. நாட்டின் நான்காவது தூண் என சொல்லப்படும் பத்திரிக்கைத் துறை ஊழியர்களை கொலை வெறி கும்பல் வெறி கொண்டு தாக்கும் போது, காக்க வேண்டிய காவல் துறை கைகட்டி வேடிக்கை பார்க்கும் கொடுமையை கண்டிக்க வார்த்தைகள் போதாது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநிலத்தின் முதலமைச்சர் என அத்தனை பெரிய தலைகளின் முன்னிலையில் வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற அனுமதிக்கப்பட்டால், சாமானிய மக்கள் எந்த தைரியத்துடன் வெளியில் நடமாட முடியும், எனக்கு தெரிந்து வாழும் போது இறந்த பிறகும் அதிக அவமானத்திற்கு உள்ளான தலைவர்களில் அம்பேத்கர் முன்னிலை வகிக்கிறார். சாமானிய மக்களின் வாழ்வு நலனுக்காய் சண்டமாருதம் செய்த அந்த மாபெரும் தலைவனின் பெயரை வைத்தாலும் பிரச்சினை, அவரது சிலையை வைத்தாலும் பிரச்சினை என்ற போக்கு, இன்னும் இருளில் இருக்கும் கோடான கோடி தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் விடியல் ஏற்படுமா? என்ற கேள்வியை அழுத்தமாகவே கேட்க வைக்கிறது. வேறு செய்திகளை சேகரிக்க போகும் போது பத்திரிக்கையாளர்கள் மீது ஏற்படும் மன வருத்தங்களை போலீசார் இது போன்ற வன்முறைகளின் போது தீர்த்துக் கொள்ளும் தவறான உதாரணமும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் கொடுமை என்னவெனில் என்.டி.டி.வி ஹிந்து மற்றும் ஜெயா தொலைக்காட்சி நிருபர்கள் தாக்கப்பட்டதை அன்று மாலை அந்த இரண்டு தொலைக்காட்சிகளை தவிர வேறு எந்த தொலைக்காட்சியும் முன்னுரிமை கொடுத்து செய்தியாக ஒளிபரப்பவில்லை. நம்முள் ஒருவன் தாக்கப்படுகிறான் என்றால் நம் உணர்வுகளை கோபத் தீயில் கொப்பளிக்க வேண்டாமா ? எத்தனை நாட்கள் பிழைக்க போகிறோம் இப்படி ஒரு மானங்கெட்ட பிழைப்பை ? மற்றவர் பிரச்சினைக்காய் குரல் கொடுத்து குரல் கொடுத்து ஓய்ந்து போகும் நாம், நம்முள் ஒருவருக்கு அவமானம் என்றால் ஏன் போராட தயங்குகிறோம். நிச்சயம் இது போன்ற எதேர்ச்சதிகார போக்க கண்டிக்க தவறக் கூடாது.....கண்டிப்போம்.... ஓரணியாய் நின்று குரல் கொடுப்போம்....

Wednesday, March 17, 2010

வரவேற்கிறேன்

அன்புத் தோழர்களே....

உங்கள் அன்பு நண்பன் தியாகச் செம்மல்...முழு நேர பத்திரிக்கையாளனாக பணிபுரியும் எனக்குள் பிளாக்கில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. தற்போது நிறைவடைந்துள்ள எனது ஆர்வத்தை முறையாக பயன்படுத்திட உங்கள் ஆதரவை கோருகிறேன். என்னுடன், நீங்கள் அரசியல்,பொருளாதாரம் மற்றும் சமூகத் தளங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கலாம், ஆலோசனைகளையும் வழங்கலாம். ஆரோக்கியமான விமர்சனங்களை எதிர்நோக்கி என் எழுத்துப் பணியை இந்த பிளாக்கில் துவங்குகிறேன்.