Powered By Blogger

Tuesday, June 29, 2010

நீ நீ நீ நீ நீ நீ நீ நீ..........தி (தீ)



கதை கேளு...கதை கேளு...

ஜனநாயக நாடு ஒன்று

ஜனப்படுகொலைக்கு துணை போன

துயரமான

கதை கேளு...கதை கேளு...

போரும் நடக்கல !

பூகம்பமும் வரல !

ஒரே ராத்திரியில

பல்லாயிரம் பேர்

பொசுங்கிப் போன

பரிதாபமான

கதை கேளு...கதை கேளு...

கயவர்கள் சில பேரு...

காத்துல நஞ்சு கலந்து...

உசிரு குடிச்ச உக்கிரத்தை

வருஷம் 30ஆகியும்

ஏன்னு கேட்க

துப்பில்லா தேசத்தின்

கதை கேளு...கதை கேளு...

உயிருக்கு ஒரு ருபாய் அபராதம்னு

20ஆயிரம் பேர கொன்னவனுக்கு

20ஆயிரம் ரொக்கத்த

அபராதம் விதிச்சு

தீர்ப்பு சொல்லி கலங்கப்பட்ட

நீதித் துறையோட

கதை கேளு...கதை கேளு...

ஒரு அமெரிக்கன்

உசுருக்கு முன்னாடி

ஒரு லட்சம் இந்திய உசிரு

மசிராகிப் போன

மானங்கெட்ட

கதை கேளு...கதை கேளு...

என்ன கதை கேட்டு

என்னதான் ஆச்சுதுங்க

தாமதமா கிடைச்சாலும்

உருப்படியா கிடைக்காத

நீதி ஒரு நீதியில்லை !

விஷவாயு கசிவால மாண்ட

மக்களுக்கு

இடுகாட்டில் வைக்ப்பட்ட

மற்றுமொரு தீ.....

இந்த நீ நீ நீ நீ நீ நீ......தி (தீ)

Wednesday, June 16, 2010

என்று தணியும் ?


கம்யூனிசம் வாழட்டும் !
இல்லை வீழட்டும் ?
காந்தியம்
பிழைக்கட்டும் !
இல்லை சாகட்டும் ?
அமெரிக்க ஏகாதிபத்தியம் !
வளரட்டும் இல்லை தளரட்டும் ?
மாநில அரசுகள்
மத்திய அரசை
சுரண்டட்டும் !
இல்லை வாரி
வழங்கட்டும் ?
உலக நாடுகள்
இந்தியாவை
போற்றட்டும் !
இல்லை தூற்றட்டும் ?
எதுவே வேண்டுமானாலும்
நடக்கட்டும் ?
எப்படி வேண்டுமானாலும்
போகட்டும் !
அய்யா பெரியவரே !
அரசியல் பிழைப்போரே !
நித்தமும் ஒரு வேளை உணவு
மட்டும் உண்டு
உறங்க போகும்
என் பல கோடி இந்திய
சொந்தங்களின்
பசி போக என்ன
செய்தீர்கள் ?
செய்வீர்கள் ?
புரட்சிக்கு அடிப்படை
என்னவென்று தெரியாது எனக்கு
ஆனால்
அடிப்படையில்
தனி மனித பசியே
புரட்சிக்கு விதை !
அரசில் பெரியோரே
ஆட்சியில் உள்ளோரே !
முடிவு செய்யுங்கள்
பசிக்கு தீர்வா ?
இல்லை புரட்சிக்கு..........?

Tuesday, June 1, 2010

அலுவலகத்து சிசிடிவி கேமிரா !

நம்பிக்கை என்னும்
சொல்லின்
மரணத்தில்
ஜனித்த
நவீனத்தின் குழந்தை !

தனக்காய் பாடுபடும்
தொழிலாளியை
கண்கானிக்க இரு கண்கள்
போதாது என எண்ணும்
முதலாளியின்
மூக்கு கண்ணாடி !

என் அலுவலகத்து
பெண் மக்கள்
கலைந்த உடையை
சரி செய்யக்
கூட அச்சப்பட்டு
யாரோ பார்பதாய் எண்ணி
அஞ்சி மருக வைக்கும்
நவயுகத்தின் துச்சாதனன் !

இதயத்துக்கு இனியவர்கள்
அலைபேசியில் அழைத்தால்
ஐய்யோ பார்க்கிறானே
என பயந்து
மறைவிடத்திற்கு
ஓடி எனை
பேச வைத்த
உயிரில்லா உயரதிகாரி !

உழைப்பு உறிஞ்சும்
உலகமயத்தின்
உன்னத படைப்பாய்
அலுவலகங்களில் உயர்ந்து
நிற்கும் சுழலும் சூழ்ச்சிக்காரர்கள் !

கண்கானிப்பு கேமிராக்கள்
வைத்து உருப்படியாய்
ஏதும் செய்ததாய் தெரியவில்லை

அயராது உழைத்து 5
நிமிடம் தூங்கிப் போன
தொழிலாளியை
வேலை நீக்கம்
செய்ததை தவிர ?