Powered By Blogger

Tuesday, August 17, 2010

எங்கே சுதந்திரம் ?


ஆகஸ்ட் 15 !

நள்ளிரவில் கனவு ஒன்று கண்டேன் !
கனவில் வந்தார் காந்தி தாத்தா
பெற்றுக் கொள் பேராண்டி
சுதந்திரம் என்று ஒன்றை
தந்தார் என் கையில் !


காந்தி தாத்தா
தந்த சுதந்திரத்தை
கம்பீரமாய் கையில் ஏந்தி


கல்வி கற்க சென்றேன்
லட்சங்களை கொண்டு வா
லட்சியங்களை அடையளாம்
இலவசமாய் கல்வி பெற
உனக்கில்லை சுதந்திரம்
என்றார்கள் !


மனதிற்கு பிடித்த பெண்ணை
மனம் முடிக்க சென்றேன்
சாதி விட்டு சாதி மணம் முடிக்க
உனக்கில்லை சுதந்திரம்
மறந்துவிடு அவளை
என்று
என் மனம் நோக
சொன்னார்கள் !


அரசியல் களம் கண்டு
அதிசயங்கள் செய்ய
எண்ணி எடுத்து வைத்தேன்
முதல் அடியை
நேர்மையாய் அரசியல் நடத்த
உனக்கில்லை சுதந்திரம்
வந்த வழி போய் விடு
உயிராவது மிஞ்சும் என
மிரட்டாமல் மிரட்டினார்கள் !


பத்திரிக்கை உலகம்
புகுந்து சரித்திரம் படைத்திட
சபதம் ஏற்றேன்
ஆளும் வர்க்கத்திற்கு எதிராய்
எழுத உனக்கில்லை சுதந்திரம்
மூடிவிடு பேனாவை
என்று மூக்கு உடைத்து
சொன்னார்கள் !


என் நிலை தான் இப்படி
எம் நாட்டு பெண் மக்கள் எப்படி ?
என பார்க்கச் சென்றேன்
சுதந்திரமா ? காட்டுங்கள்
என ஆர்வமாய் வாங்கியவர்கள்
வாங்கிய மாத்திரத்தில்
என்னிடமே தந்தார்கள்
அதை வைத்திருக்க

கூட அவர்களுக்கு இல்லையாம்
சுதந்திரம் !


கையில் வாங்கிய சுதந்திரத்தின்
அர்த்தம் புரியாமல் வாங்கியவரிடமே
திரும்பி கொடுத்துவிட தேடினேன்
காந்தி தாத்தாவை

சட்டென கலைந்தது தூக்கம் !
பட்டென கேட்டது ஒரு குரல் !


காந்தி தாத்தாதான்
கோடிக்கணக்காய் புரலும்
கள்ள நோட்டுக்களுக்குள்
சிரித்த முகமாய்
சிறைபட்டு கிடக்கிறாரே
என்றது அந்த குரல் !


எங்கு தான் இருக்குது சுதந்திரம் ?
யாராவது பார்த்தால் சொல்லுங்கள் !
பெற்ற சுதந்திரத்தை வாழ்வில்
ஒரு முறையாவது
அனுபவித்து விட்டு மரிக்கிறேன் !

3 comments:

  1. என்ன கொடுமை இது?

    ReplyDelete
  2. சுதந்திரம் பற்றி கவிதை எழுதவாவது அந்த 'அது' (சுதந்திரம் தாங்க...)பயன்படுகிறதே என்று எண்ணி ஆறுதல் கொள் மனமே...

    ReplyDelete
  3. இந்தியாவுக்கு கிடைத்த சுதந்திரதிற்கு காரணம் இங்கிலாந்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி நண்பா. இந்தியா போன்ற நாடுகள் இன்னும் ஏகாதிபத்தியத்திடம் நவீன அடிமைகளாகத்தான் இருக்கின்றன.

    ReplyDelete