Powered By Blogger

Wednesday, October 13, 2010

யார் அனாதை ?


மரணம்
பூமியில் ஜனித்த

அத்தனை உயிர்களுக்கும்
நிச்சயிக்கப்பட்ட
மாறா வரம்...

ஜனத்திரள் நெருக்கத்தில்
மின்சார காடாய்

மாறிப் போன
ஒரு இடுகாட்டு வாசலில் நான் !

தொழில் நிமித்தமாய்
நிற்க நேர்ந்தது
சில மணி நேரம் !

வாழ்ந்த போதும்
வாழ்வுக்கு பிறகும்
மரியாதை எனும் சொல்லை
மரியாதைக்கு கூட பார்த்திராத
மனித உடல்
மரித்த நிலையில்...

அனாதை பொனம்
அள்ளிப் போடு
சாவுகிராக்கிங்க
வேறு எங்காவது
போய் சாகலாம்ல

அசௌகர்யமாய்
காதில் விழுந்த வார்த்தைகளும்
காட்சிகளும்...

நிற்க !

மனித்துளிகள் கடக்க
மற்றொரு மனித
உடல்
ராஜபாட்டையுடன்
வாண வேடிக்கைகள்
தாரை தப்பட்டைகள்
இன்றைய பிணத்துக்கு முன்
ஆடிப்பாடி அரை மயக்கத்தில்
வந்த நாளைய பிணங்கள்...

இடுகாட்டுள் இருமாப்புடன் நுழைய
காண்கிறேன்...

நேரம் கடந்தது
காரியம் முடிந்தது

இரு தரப்பும் வெளியேற
கையில் இரு வேறு குவளைகள்

ஓடி வந்த இடுகாட்டு ஊழியர்
ஐயா சாமி குவளை மாறிடிச்சு
அலறிய சத்தம் !

தேடல் தொடங்கியது
சாம்பல் குவளைக்குள்

அனாதை சாம்பல் எது ?
ஆண்டையின் சாம்பல் எது ?

அந்தி சாய்ந்தும் முடியவில்லை
தேடல் !

தெரிந்தவர் சொல்லுங்கள்
எந்த சாம்பல் ?
யாருடையது ?

இல்லையேல் இங்கே வெடிக்கும்
ஒரு சாதிக் கலவரம்
சாம்பலை கண்டுபிடிக்க !