Saturday, March 3, 2012

நான் யார் ?


வாகனத்தின் நீளம் 5 அடி

கடந்து செல்ல

இரு நொடி போதும்...

ஆனாலும் ஆயிரம்

யோசனைகளை...

அழுக்காயிருந்தாலும்

ஆபத்துக்கு பாவமில்லை

என முகம் மூடிய

கைகுட்டை...

இருந்தும் நாற்றம்

நாசியில் புக

வாந்தி வந்தது...

முகத்தை சுளித்து

சிரிப்பை

மறந்து கடந்தேன்

அந்த வாகனத்தை...

வாகனத்தில் நின்றிருந்தவர்

என்னை பார்த்து சிரித்தார்....

சினம் தலைக்கேறி அவரை பார்த்து கேட்டேன்

என்னையா சிரிக்கிற ?

சிரிப்பை நிறுத்தாமல்

அவர் சொன்னார்

நீ போட்ட குப்பையை

நான் அள்ளுரேன்

ஆனா உன்னால்

அரைநொடி கூட நாத்தைத்தை

பொறுக்க முடியல?

பொட்டில் தெரித்தது எனக்கு

ஆம்

யாரோ போடும் யாரோ தான்

அள்ளுகிறார்கள்

ஆனாலும் ஆயிரம் பேதங்கள்...

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று...

அப்படியெனில்

யார் நான் ?

நிச்சயம் தாழ்ந்தவனே...

Saturday, February 11, 2012

எங்கு சென்றாய் தோழா ?


வந்துவிடு தோழா…
வகுப்புகளில் உன்தன்
மார்க்சிய வார்த்தைகளில் நாங்கள்
எங்களை மறந்திட…

வந்துவிடு தோழா…
உலக நடப்புகளை ஒரு நொடிப்பொழுதில்
நீ உரைத்திட
அதை கேட்டு நாங்கள் உறைந்திட
வந்துவிடு தோழா….

உலகமயமும்,தனியார்மயமும்,தாராளமயமும்
எங்களை உலுக்கி எடுக்கிறது….
உரிய வழி காண,
களம் கண்டு போராட…
வந்துவிடு தோழா….

எத்தனைதான் அழைத்தாலும்
நீ வரமாட்டாய் என தெரியும்…

என்ன செய்ய ?
மக்களை காக்க போராடும்
நாங்கள்…
உன்னை காக்க மறந்தோமே…!

இன்குலாப் சிந்தாபாத்
காம்ரேட் w.r சிந்தாபா

Thursday, February 9, 2012

சாதி வேண்டுமே !


பாசமானவன் நீ

என்றால் அவள்…

பணக்காரன் இல்லை என்றார்கள்

அவள் பெற்றோர்…

அன்பானவன் நீ

என்றால் அவள்…

அந்தஸ்து இல்லையே என்றார்கள்

அவள் பெற்றோர்…

எல்லாம் சரி அவன் சத்தியவான்

சேர்த்து வையுங்களேன்

என்றால் அவள்….

சத்தியவான் எல்லாம் சரி

சாதிக்காரன் இல்லையே என்றார்கள் பெற்றோர்….

எங்கு போவேன் நான் ?


காதலித்தவளை கரம்பிடிக்க....

பணம் வேண்டும் என்றார்கள்
சம்பாதித்தேன்...

அந்தஸ்து வேண்டும் என்றார்கள்
அயராது உழைத்து பெற்று்க்கொண்டேன்...

அழகு வேண்டும் என்றார்கள்
அப்படி இப்படி தேர்த்திவிட்டேன்...

சண்டாளர்கள்...
கடைசியாய்
சாதி வேண்டும் என்கிறார்கள்

எங்கு போவேன் நான்...

Wednesday, October 13, 2010

யார் அனாதை ?


மரணம்
பூமியில் ஜனித்த

அத்தனை உயிர்களுக்கும்
நிச்சயிக்கப்பட்ட
மாறா வரம்...

ஜனத்திரள் நெருக்கத்தில்
மின்சார காடாய்

மாறிப் போன
ஒரு இடுகாட்டு வாசலில் நான் !

தொழில் நிமித்தமாய்
நிற்க நேர்ந்தது
சில மணி நேரம் !

வாழ்ந்த போதும்
வாழ்வுக்கு பிறகும்
மரியாதை எனும் சொல்லை
மரியாதைக்கு கூட பார்த்திராத
மனித உடல்
மரித்த நிலையில்...

அனாதை பொனம்
அள்ளிப் போடு
சாவுகிராக்கிங்க
வேறு எங்காவது
போய் சாகலாம்ல

அசௌகர்யமாய்
காதில் விழுந்த வார்த்தைகளும்
காட்சிகளும்...

நிற்க !

மனித்துளிகள் கடக்க
மற்றொரு மனித
உடல்
ராஜபாட்டையுடன்
வாண வேடிக்கைகள்
தாரை தப்பட்டைகள்
இன்றைய பிணத்துக்கு முன்
ஆடிப்பாடி அரை மயக்கத்தில்
வந்த நாளைய பிணங்கள்...

இடுகாட்டுள் இருமாப்புடன் நுழைய
காண்கிறேன்...

நேரம் கடந்தது
காரியம் முடிந்தது

இரு தரப்பும் வெளியேற
கையில் இரு வேறு குவளைகள்

ஓடி வந்த இடுகாட்டு ஊழியர்
ஐயா சாமி குவளை மாறிடிச்சு
அலறிய சத்தம் !

தேடல் தொடங்கியது
சாம்பல் குவளைக்குள்

அனாதை சாம்பல் எது ?
ஆண்டையின் சாம்பல் எது ?

அந்தி சாய்ந்தும் முடியவில்லை
தேடல் !

தெரிந்தவர் சொல்லுங்கள்
எந்த சாம்பல் ?
யாருடையது ?

இல்லையேல் இங்கே வெடிக்கும்
ஒரு சாதிக் கலவரம்
சாம்பலை கண்டுபிடிக்க !

Tuesday, August 17, 2010

எங்கே சுதந்திரம் ?


ஆகஸ்ட் 15 !

நள்ளிரவில் கனவு ஒன்று கண்டேன் !
கனவில் வந்தார் காந்தி தாத்தா
பெற்றுக் கொள் பேராண்டி
சுதந்திரம் என்று ஒன்றை
தந்தார் என் கையில் !


காந்தி தாத்தா
தந்த சுதந்திரத்தை
கம்பீரமாய் கையில் ஏந்தி


கல்வி கற்க சென்றேன்
லட்சங்களை கொண்டு வா
லட்சியங்களை அடையளாம்
இலவசமாய் கல்வி பெற
உனக்கில்லை சுதந்திரம்
என்றார்கள் !


மனதிற்கு பிடித்த பெண்ணை
மனம் முடிக்க சென்றேன்
சாதி விட்டு சாதி மணம் முடிக்க
உனக்கில்லை சுதந்திரம்
மறந்துவிடு அவளை
என்று
என் மனம் நோக
சொன்னார்கள் !


அரசியல் களம் கண்டு
அதிசயங்கள் செய்ய
எண்ணி எடுத்து வைத்தேன்
முதல் அடியை
நேர்மையாய் அரசியல் நடத்த
உனக்கில்லை சுதந்திரம்
வந்த வழி போய் விடு
உயிராவது மிஞ்சும் என
மிரட்டாமல் மிரட்டினார்கள் !


பத்திரிக்கை உலகம்
புகுந்து சரித்திரம் படைத்திட
சபதம் ஏற்றேன்
ஆளும் வர்க்கத்திற்கு எதிராய்
எழுத உனக்கில்லை சுதந்திரம்
மூடிவிடு பேனாவை
என்று மூக்கு உடைத்து
சொன்னார்கள் !


என் நிலை தான் இப்படி
எம் நாட்டு பெண் மக்கள் எப்படி ?
என பார்க்கச் சென்றேன்
சுதந்திரமா ? காட்டுங்கள்
என ஆர்வமாய் வாங்கியவர்கள்
வாங்கிய மாத்திரத்தில்
என்னிடமே தந்தார்கள்
அதை வைத்திருக்க

கூட அவர்களுக்கு இல்லையாம்
சுதந்திரம் !


கையில் வாங்கிய சுதந்திரத்தின்
அர்த்தம் புரியாமல் வாங்கியவரிடமே
திரும்பி கொடுத்துவிட தேடினேன்
காந்தி தாத்தாவை

சட்டென கலைந்தது தூக்கம் !
பட்டென கேட்டது ஒரு குரல் !


காந்தி தாத்தாதான்
கோடிக்கணக்காய் புரலும்
கள்ள நோட்டுக்களுக்குள்
சிரித்த முகமாய்
சிறைபட்டு கிடக்கிறாரே
என்றது அந்த குரல் !


எங்கு தான் இருக்குது சுதந்திரம் ?
யாராவது பார்த்தால் சொல்லுங்கள் !
பெற்ற சுதந்திரத்தை வாழ்வில்
ஒரு முறையாவது
அனுபவித்து விட்டு மரிக்கிறேன் !

Wednesday, August 4, 2010

பிறக்க வேண்டும் ஒரு பெண் குழந்தை...


சாபம் இடுவதாக
எண்ணி
நண்பன் ஒருவன்
ஆத்திரத்தில கூறினான் !

தலைப்புள்ள பொட்டப்புள்ளையா
பொறக்கணும்டா உனக்கு !

சாபமாய் அவன்
நினைத்தாலும்
வரமே
அது எனக்கு !

பிறக்க வேண்டும்
ஒரு பெண் குழந்தை !

என் மகளை
மகளாய் வளர்க்காமல்
மகனாய் வளர்த்திடுவேன்
எனச் சொல்லாமல்
மகளை மகளாகவே
வளர்த்திடுவேன்...

இப்படித் தான் இருக்க
வேண்டும்
பெண்
என இல்லாமல்
எப்படியும இரு
ஆனால்
இவர் இப்படி
எனச் சொல்லும்படி இராதே
எனக் கூறி
வளர்த்திடுவேன் அவளை...

நீண்ட கூந்தலோ ?
நெடிய சேலையோ ?
உன் மனம் விரும்பும்
போக்கில் உடையணிவாய்
மலரே என
ஆடை சுதந்திரத்தை
அவளுக்கு
அளித்து வளர்த்திடுவேன்

பெண்ணுக்கு இல்லை
இலக்கணங்கள்
மனிதத்தோடு வாழ்ந்திட
சக மனிதரோடு
இணக்கமாய் வாழ்ந்திடு
என வாழ்த்தி
அவளை வளர்த்திடுவேன் !

கோடிக்கு ஒரு இந்திரா
லட்சத்திற்கு ஒரு அன்னை தெரசா
இப்படி
நீ மட்டும் வளர்வதோடு
நில்லாமல்
உன் இனத்தையும்
வளர்த்திடு என
வாஞ்சையோடு அவளை வளர்த்திடுவேன் !

மனைவியாய் பாராது
சக மனுஷியாய்
பார்பவனை
மனந்திடும் உரிமையை
அவளுக்கே வழங்கிடுவேன் !

பெண்ணாய் பிறந்ததால்
இயற்கை என்றைக்கும்
எதிரியாய் நிற்கும்
என்பதால்
இலகுவாக இல்லாமல்
இரும்பு மனுஷியாய்
அவளை வளர்த்திடுவேன் !

இத்தனையும் நிறைவேறிட
நிச்சயம் பிறக்க வேண்டும்
ஒரு பெண் குழந்தை !